டிசம்பர் 16 முதல் ஜனவரி 14 வரை


1,10,19,28.

இந்த எண்களில் பிறந்தவர்கள் சூரியனின் வகைக்குள் வருவீர்கள். இந்த மாதம் உங்கள் எண்ணின் நாயகன், சூரியன் ஓஹோ, பேஷ், பேஷ் என்று உள்ளார். எனவே நீங்கள் நினைத்த, விஷயங்கள், கொஞ்சம் எதிர்மறை தன்மையுடன் சிறப்பாக நடக்கும். வீடு கட்டுவது, பெற்றோர் அனுசரணை மற்றும் அவர்களின் உடல்நலம், நல்ல பணியாளர் அமைவது, இளைய சகோதரியின் வேலை, இளைய சகோதரியின் திருமணம் வாரிசு கிடைப்பது, பேரன்- பேத்தி எடுப்பது, உயர் கல்வி சார்ந்து, வெளிமாநில, வெளிநாட்டு பயணம், சிலரின் காதல் திருமணம், தனியார் வேலை கிடைப்பது, மாமியாரின் உதவி, எதிர்பாராத பணவரவு, கலைஞர்களின் நல்ல வாய்ப்புகள் பெற்றல் என நல்ல பல விஷயங்கள் நடக்கும். அரசியல்வாதிகள் நல்ல பெருமை பெற்றாலும், கூடவே ஒரு வழக்கும் சேர்ந்துவரும். இந்த எண் பெண்களுக்கு மாங்கல்யம் சார்ந்து ஒரு நெருடல் ஏற்பட்டு பின் நீங்கும். உங்கள் ஊரில், திருச்செந்தூர் முருகன் சந்நிதி இருந்தால், அங்கு நெய் விளக்கு ஏற்றி, வணங்கியும், விளக்கு நெய் பாட்டில் வாங்கி, அங்குள்ள அர்ச்சகரிடம் கொடுக்கவும். படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வாங்கிக் கொடுங்கள். 

Advertisment

2, 11, 20, 29.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் சந்திரன் ஆதிக்கமுடையவர்கள். சந்திரன் ஒரு நாளைக்கு, ஒரு நட்சத்திரமாக அலைந்துகொண்டே இருப்பார். உங்களுக்கும் ஒரு நாளைக்கு, ஒருவித யோசனை வரும். உங்களில் நிறைய பேருக்கு அரசு வேலை கிடைக்கும். அது, அனேகமாக பணம் அல்லது வாக்கு சம்பந்தப்பட்ட பணியாக இருக்கும். வீடு வாங்க, கட்ட அரசாங்கத்திடம் கடன் வசதி கிடைக்கும். உங்களில் சிலர், அரசுவகையில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி, வேறுவகை அதிகவட்டி கடனை அடைத்துவிடுவீர்கள். உங்கள் வீட்டு வயதானவர்கள் அல்லது குழந்தையை கவனிக்க பணியாள் அமர்த்திக்கொள்வீர்கள். பெற்றோர்நலன் கவனிக்கப்பட வேண்டும். உங்களில் சிலரின் வாரிசுகள் அரசு பணிக்கு சேர்வர். சிலர் வெளிநாட்டு வேலைக்கு செல்வர். தம்பதிகளுக்குள் சண்டை வந்து போகும். ஆன்மிக பயணம் உண்டு. அல்லது உயர்கல்வி சார்ந்த வெளிமாநில பயணம் கிடைக்கும். அரசு பணியாளர்கள், பதவி உயர்வு கிடைக்கப்பெறுவர். கலைஞர்கள் அதிக வேலைப்பளு காண்பர். அரசியல்வாதிகள், அலைச்சலும், செலவும், அதிக பேச்சும், வேலை சிரமமும் காண்பர். பூர்வீக தொழில் செய்பவர்கள், பண விஷயமாக, சற்று அல்லாட வேண்டியிருக்கும். அல்லது பணம் காணாமல் போகும் வாய்ப்புண்டு. திருச்செந்தூர் முருகர் சந்நிதிக்கு, அபிஷேகப் பொருட்கள் கொடுக்கவும். குழந்தைகளின் ஆரோக்கியம் சம்பந்தமாக உதவுங்கள். 

Advertisment

3, 12, 21, 30.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் குருபகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள். இந்த மாதம் உங்கள் எண்ணின் நாயகன் குரு, நன்மையும், தீமையும் கலந்து கட்டி தருவார். இந்த மாதம் உங்களில் பாதி பேருக்கு, அரேன்ஜ்க்கு மேரேஜ் உறுதிபடுத்தப்படும். மீதி இருப்போர், காதல் கல்யாணம் செய்வர். காதல் கல்யாணம் செய்த கையோடு, அடடா அவசரப்பட்டுட்டோமோ, கொஞ்சம் நிதானிச்சு, வீட்டில் பார்த்த வரனை கட்டியிருக்கலாமோ எனும் எண்ணம் கண்டிப்பாக எட்டி பார்க்கும். உங்கள் மூத்த சகோதரிக்கு அரசு வேலை கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை இடமாறுதல் பெறுவார். நிறைய பேர், அரசுவகை பதவி உயர்வு பெறுவர். சிலர் தொழிலில் முதலீடு செய்வீர்கள். கலைஞர்கள், தங்கள் சேவையில், ஒருபடி முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் தங்களின் பூர்வீக இடத்தில், தங்களின் தந்தையின் ஆதரவில், மேன்மைக்கான வழியை ஆரம்பித்துவிடுவர். சமையல் சார்ந்த ஓட்டல் ஆரம்பிக்க நினைக்கும், இந்த எண்காரர்கள், இந்த மாதத்தில், அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கிவிடுங்கள். தந்தையின், குலதெய்வ வழிபாட்டு பயணத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். திருச்செந்தூர் சுப்பிரமணியர் சந்திக்கு, மஞ்சள் வஸ்திரம் வாங்கி சாற்றவும். மாணவர்களின் தொழிற் பயிற்சிக்கு உதவுங்கள். 

4, 13, 22, 31.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்க வளையத்துக்குள் வருவீர்கள். உங்கள் எண்ணின் நாயகன் காலபுருசனின் லாப ஸ்தானத் தில், ஜாலியாக அமர்ந்துகொண்டு உள்ளார். எனினும் குரு பார்வையினால் சற்று எரிச்சலும் அடைகிறார். இந்த மாதம் பேசி முடிக்கப்படும் திருமணத்தில் சற்று அரசியல்வாதிகள் தொடர்பு இருக்கும். பூர்வீகம் நல்ல லாபம் கொடுக்கும். வீட்டிற்கு மருமகன் வருவார். உங்கள் மூத்த சகோதர- சகோதரிகள் உங்கள் வீட்டு விசேஷம் நடக்க நன்கு ஒத்தாசை செய்வர். கைபேசியால் நன்மை உண்டு. பணியாளர்கள் பயன் தருவர். பெற்றோர்களின் அனுசரணையும், பண உதவியும் நிறைய கிடைக்கும். மேலும் உங்கள் மாமனார்- மாமியாரின் ஒத்துழைப்பும் தேடிவரும். பங்கு வர்த்தகம் சுமாராக அமையும். கலைஞர்கள், தாங்கள் நினைத்த செயலை செய்துமுடிப்பர். அரசியல்வாதிகள், தங்கள் வெற்றியை தங்கள் குடும்ப உறுப்பினர்மூலம் நிறைவேற்றிவிடுவர். உயர்கல்வி மாணவர்கள் அரசு உதவி பெறுவர். சில விளையாட்டு வீரர்கள் அரசு பதவிக்கு செல்லமுடியும். உங்கள் செயல்களில் சிறு, சிறு தடைகள் ஏற்பட்டாலும், பின் அவை சரியாகிவிடும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சந்திக்கு, முடிந்தால், வெட்டிவேர் மாலை சமர்ப்பிக்கவும். பள்ளி குழந்தைகளுக்கு, தொழில்முறை பயிற்சி சார்ந்த சாதனங்களை வாங்கிக்கொடுங்கள். 

Advertisment

5, 14, 23.

உங்கள் எண்ணுக்குரிய நாயகன் புதன் ஆவார். இந்த மாதம் உங்கள் எண்ணின் நாயகன், சுமார் மூஞ்சிகுமாராக உள்ளார். உங்கள் சொந்தத் தொழிலில் பணியாளர்கள், சற்று தகராறு செய்வர். உங்கள் தந்தையின் வீடு சம்பந்த பணம் கைக்கு கிடைக்கும். உங்கள் இளைய சகோதரன், அரசு சம்பந்தமான இக்கட்டில் சிக்கி இடம் மாறுவார். வீடு மாற்றம் உண்டு. சிலர் வாகனங்கள் ரொம்ப பழையதை கொடுத்துவிட்டு மாற்றுவர். தொழில் கல்வி சார்ந்து, உயர்கல்வி மாணவர்கள், வேறிடம் செல்ல நேரிடும். தொழில் செய்யும் இடம் மாற்ற வேண்டிவரும். உங்கள் பெற்றோர்கள் சில விஷயங்களுக்காக, இடம் மாறுவர். வாரிசுகளுடன், சற்று மனஸ்தாபம் வரும். காலில் நரம்பு பிடித்து வலிக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை, தன்னுடைய தொழிலில் கிளைகள் ஆரம்பித்துவிடுவார். இதனால் உங்களுக்கு சிறு தூர அலைச்சல் அதிகமிருக்கும். சிலரின் வீட்டில் அரசு அறிவுறுத்தல்படி, பழுது நீக்கும் செலவு உண்டு. இப்போது நடக்கும் அமைப்புத் திருமணம் அல்லது இஷ்ட திருமணம் உங்கள் தொழில் சார்ந்து அமையும். திருச்செந்தூர் முருகன் சந்நிதிக்கு, பச்சை  வஸ்திரம் சாற்றி வணங்கவும். குழந்தைகளின் பள்ளி வாகன செலவுக்கு பணம் கொடுத்து உதவுங்கள். 

6, 15, 24.

உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன் ஆவார். இந்த மாதம், உங்கள் எண்ணின் நாயகன், சுக்கிரன் சற்று சுபமாகவே உள்ளார். அதனால் நிறைய சுபச்செலவுகளைத் தரப்போகிறார். அது உங்கள் இளைய சகோதரியின் திருமண செலவாக இருக்கும். இளைய சகோதரனின் உயர்கல்வி செலவு அல்லது வெளிநாட்டு செலவாக அமையும். உங்களின் திருமண நிச்சய விழா செலவாக உண்டாகும். சிலருக்கு  மருமகன்- மருமகள் வரும் செலவாக இருக்கும். வேலையில் பதவி உயர்வுடன்கூடிய இடமாற்றம் செலவாக இருக்கும். அரசியல்வாதிகள், தங்கள் தொண்டர்களுக்கு, சுப்பரான விருந்து அல்லது சிறு தூர வாகனம் வாங்கிக் கொடுக்கும் செலவாக இருக்கலாம். அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க அல்லது அட்வான்ஸ் கொடுக்க, ஏற்படும் செலவாக இருக்கும். சிலரின் தந்தையின் உடல்நலம் பொருட்டு, மருத்துவமனை செலவாக இருக்கும். இந்த மாதம் முழுவதும் ஏதோ ஒரு செலவு வந்து, போய் கொண்டிருக்கும். கையில், கார்டில், அலைபேசி ஆப்பில், பணம் கரைந்துகொண்டே இருக்கும். திருச்செந்தூர் முருகனுக்கு காணிக்கை பணம் செலுத்தவும். வயதானவர்களின் பயண டிக்கெட் செலவுக்கு பணம் கொடுங்கள். 

7, 16, 25. 

உங்கள் எண்ணின் நாயகன் கேது ஆவார். கேதுவிற்கு இடம் கொடுத்தவர் நல்ல நிலைமையில் உள்ளார். உங்களுக்கு இந்த மாதம் அரசுவகையில் நன்மையும், தீமையும் கலந்து கிடைக்கும். அரசியல்வாதிகள் எவ்வளவு நன்மை செய்தாலும், அது ஏனோ தீமையில் போய் முடியும். வாரிசுகள் ஒருமுறை சிரிக்க வைத்துவிட்டு, நாலு முறை அழச் செய்வர். பங்கு வர்த்தகம் மிக நன்மையாக சென்றுகொண்டிருக்கிறது என நினைத்து கொண்டிருக்கும்போதே, எதிர்பாராத ஒரு இறக்கம் வந்து பயமுறுத்தும். இந்த மாதம் உங்களுக்கு ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட தோன்றும். திருமணம் அமையும். கலைஞர்கள் சிரமும், அதிர்ஷ்டமும் ஒருங்கே காண்பர். மாணவர்கள், நன்கு படித்து இருந்தாலும், முக்கியமான நேரத்தில் மறதி வந்து துன்புறுத்தும்.திருச்செந்தூர் முருகனுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வணங்கவும். குழந்தைகளுக்கு ஸ்கிப்பிங் கயிறு வாங்கிக் கொடுங்கள். 

8, 17, 26.

இந்த எண்ணின் நாயகர் சனி ஆவார். குரு பார்வையில் சுபத்துவமாக உள்ளார். இந்த மாதம் ரொம்ப அலைச்சல் இருக்கும். காரணம் பலவிதம். அலைச்சல் ஒருவிதம். சிலர் வேலை கிடைத்து வேறிடம் செல்வீர்கள். சிலர் வேலையில் பதவி உயர்வு கிடைத்து வேறிடம் செல்வீர்கள். வேலை செய்யும் பணியாளர்களை திரட்ட வேறு மாநிலம் செல்வீர்கள். வேறு வீடு மாறுவது அல்லது வீட்டை விற்பதால் வீடு மாற்றம் உண்டு. வாரிசுகளால் இடமாற்றம் வரும். உங்களில் சிலர், சிறையிலிருந்து வெளி வரக்கூடும். உங்களில் சிலர், உங்கள் முதலாளிகளுடன், வெளிநாடு செல்வீர்கள். சில அரசியல்வாதிகள், ஆரோக்கியம் அல்லது தொழில் முதலீடு சம்பந்தமாக வெளிநாடு செல்வர். கலைஞர்கள், அழகு மேன்மை பொருட்டு, வெளிமாநிலம் அல்லது வெளிநாடு செல்வர். பங்கு வர்த்தகம் முதலீடு அதிகம் செய்ய செய்யும். அல்லது சுத்தமாக துடைத்து நஷ்டம் கொடுத்துவிடும். சிலர் மனநிலை சமன்படுத்த, மனநல மருத்துவரிடம் செல்வார்கள். திருச்செந்தூர் முருகன் சந்நிதிக்கு, நல்லெண்ணெய் வாங்கிக் கொடுங்கள். சமையல் வேலை செய்யும் பெரியவருக்கு மருந்து தேவையறிந்து உதவவும். 

9, 18, 27.

உங்கள் எண்ணின் நாயகர் செவ்வாய். இந்த மாதம் அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் உள்ளார். இந்த மாதம் அகட விகடம் செய்து, அதிர்ஷ்டத்தை உங்கள் பக்கம் இழுத்து வந்துவிடுவீர்கள். அழகாக பேசி, பேசி அனேக பணவரவை பெற்றிடுவீர்கள். உங்கள் கைபேசி செய்தியில், குத்து மதிப்பாக ஆன்மிக செய்தி வெளியிட்டு, வருமானம் பார்த்துவிடுவீர்கள். சிலர் வாரிசு யோகம் பெறுவர். சிலரின் வாரிசு உயர்கல்விக்கு, வேறிடம் நகர்வர். பங்கு வர்த்தகம் நன்மை தரும். கலைஞர்கள் நல்ல உயர்வான யோகம் பெறுவர். உங்களுக்கு வரும் கெட்டது ஒன்று மறைந்து, உங்களுக்கு நன்மையாக மாறிவிடும். திருமணம் கண்டிப்பாக நடக்கும். திருமணம் சீர்வரிசையாக செம வருமானம் கொண்டுவரும். உங்களின் சில இளைய உடன்பிறப்புகள் திருமணம் காண்பர். தொழில் மேன்மை குறித்த, குறுந்தகவல் கிடைக்கும். தொழில் வெளிநாடுவரை செல்லும். அரசியல்வாதிகள், தங்களின் தொண்டர்களின் நலனை முன்னிறுத்தி, அவர்களின் மேன்மை சார்ந்த செலவை செய்வர். இந்த செலவு இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். திருச்செந்தூர் முருகர் சந்நிதிக்கு, அரளி அல்லது நல்ல மலர் மாலை கொடுக்கவும். பணியாளர்களின் அடிப்பட்ட செலவை ஏற்றுக்கொள்ளுங்கள்.


-------------------------------------
மார்கழி மாத கிரக நிலைகள் 

சூரியன்

எல்லா வருடமும், மார்கழி மாதம் சூரியன் தனுசு ராசியில் இருப்பார். சூரியன் அரசாங்கத்தைக் குறிப்பார். அவர் இந்த மாதம், குருவின் வீட்டில், குருவின் பார்வையில் இருப்பது மிக விசேஷம். அரசாங்கம் நிறைய ஆன்மிக சம்பந்த விஷயங்களை வழிநடத்தும். இந்த மாதம், நீதி மன்றத்தின் அனேக தீர்ப்புகள், அரசாங்கத்தை அனுகூலமாக நடத்த வழிநடத்தும். அரசாங்கம் நிறைய குரு மடங்களுக்கு வேண்டியதை செய்யும். உயர் கல்விக்கு அரசாங்கம் நிறைய உதவிகளைச் செய்து கொடுக்கும். அரசாங்கம், அது வெளிநாடு அல்லது உள்நாடு என அனைத்து அரசாங்கமும் சேர்ந்து தங்கத்தின் விலையை ஸ்திரப்படுத்தும். செஞ்சந்தன மரம் பற்றி, நீதி மன்ற சட்டத்தை, அரசு பின்பற்றும். ஆசிரியர்கள், யானைகள், மஞ்சள், ஆடை, என இவை சார்ந்த முக்கிய முடிவுகளை அரசாங்கம் எடுத்துச் செய்யும். கைபேசி மற்றும் குழந்தைகள் சார்ந்த ஒரு கட்டுப்பாட்டை அரசாங்கம் வழிநடத்தும். 

செவ்வாய் 

செவ்வாய் எப்போதும் ஆளும் கட்சியைக் குறிப்பார். இவர் இந்த மாதம் முழுவதும், குருபகவான் வீட்டில் குரு பார்வையுடன் உள்ளார். மேலும் ஆளும் கட்சி செவ்வாயுடன், அரசாங்கத்தைக் குறிக்கும் சூரியனும், கூட்டணிக் கட்சியைக் குறிக்கும். சுக்கிரனும் ஒன்றாக கூடியுள்ளனர். இந்த மாதம் கவனித்துக்கொண்டே இருங்கள், வேறு வழியில்லாமல், ஆளும் கட்சி, கூட்டணிக் கட்சிகளுக்கு, அரசாங்கத்தில் அங்கம்வகிக்க, அரசாங்க பதவிபெற, கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு எனும் நிலை கண்டிப்பாக பேசி முடிக்கப்படும். இதற்கு காரணம், சில மடத் தலைவர்கள் அல்லது சில பெரிய மதிப்புமிக்க ஆட்கள் அல்லது சில ஜோதிடர்களின் அறிவுரை காரணமாக அமையும். இதனால் ஆளுங்கட்சி, சற்றே எரிச்சல் அடையும். ஜோதிடப்படி, சூரியன், செவ்வாய் இணைவு நல்லதல்ல என்பர். இது பொது வாழ்விற்கும் சரியாக பொருந்துகிறது. ஆளும் கட்சி ஆட்களுக்கு இது பிடிக்காவிட்டாலும், மனநொறுக்கத்துடன், பல் கடிப்புடனும், முகத்தில் சிரிப்புடன் இதனை ஒத்துக் கொண்டு, வழி மொழிவர். இதற்கு குருவின் பார்வையை காரணமாகக் கூறலாம். 

புதன்

புதன் எப்போதும் எதிர்கட்சிகளைக் குறிக்கும். இந்த மார்கழி மாதம் 10-ஆம் தேதிவரை விருச்சிகத்தில், சனி பார்வையில் உள்ளார். அதனால் எதிர் கட்சியினர் எவ்விதம், அரசியல் முடிவுகள் எடுப்பது என தெரியாமல் திண்டாடிப் போவர். ஏனெனில் கூட்டணி கட்சிகள், ஒன்று பதில் சொல்லாமல் இருக்கும். அல்லது ஆளும் கட்சியினரோடு கை கோர்த்துவிடும். மார்கழி 10-ஆம் தேதிக்குபிறகு, புதன் தனுசு ராசிக்கு மாறிவிடுவார். அங்கு ஏற்கெனவே இருக்கும் அரசாங்க சூரியன், கூட்டணி சுக்கிரன் இவர்களோடு, குரு பார்வையில் ஐக்கியமாகிவிடுவார். பிறகுதான் எதிர்கட்சி அப்பாடா என்று சரியாக மூச்சுவிட ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் கூட்டணி கட்சிகளிடம், பதவியில் ஆளுக்கு பேர் பாதி, சரியா என கையை துண்டை, போட்டு, முடி பேரம் பேசி, ஓரளவுக்கு தேதிவிடும். எதிர்கட்சிகள் கூட்டணி கட்சிகளிடம், பண விஷயமாகவும் நல்ல ஆதரவு கொடுப்பதாக சத்தியம் செய்வர். ஜோதிடம் செவ்வாய்- புதன் சேர்க்கை என்பது மகாயுத்தம் செய்வது போன்றது எனக் கூறும். இந்த மாதம் செவ்வாய் புதன் சேர்க்கை ஆளும் கட்சி, எதிர்கட்சி இடையே யுத்த மனப் பான்மையை கொடுத்துவிடும். 

குரு

குருபகவான், தன் வீட்டை, தனது ஏழாம் பார்வையால் பார்க்கிறார். நிறைய கோவில் வழிபாடுகளை கட்டும். குருபகவான், சூரியனை பார்ப்பதால், அரசாங்கத்துக்கு, உயர் கல்வி சார்ந்த பரிந்துரைகளை நீதிமன்றம் வழங்கும். குருபகவான், செவ்வாயைப் பார்ப்பதால், மனை விஷயம், காவல் துறையில் நல்ல பல மாற்றங்களை நடக்கும். குரு, சுக்கிரனை பார்ப்பதால், நிறைய கல்யாணம், நிச்சயதாம்பூலம், கைத் தாம்பூலம், பூ வைப்பது என திருமணத்தின் முன்னெடுப்பு வேலைகள் பரபரப்பாகும். எப்போதும் சூரியன்+செவ்வாய் சேர்க்கை பெண்களின் மாங்கல்யத்துக்கு இடையூறு கொடுக்கும். இந்த மாதம், குரு பார்வை பெண்களின் மாங்கல்யத்தை காத்து ரட்சிக்கும் மட்டுமல்லாது, கட்சிகள் மாங்கல்யத்துக்கு, தங்கம் தரும் திட்டத்தை புதுப்பிக்கிறோம் என்றும் சொல்வர். குரு, புதனைப் பார்ப்பதால், மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டே, வேலை பயிற்சி கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்படும். இந்த மாத கிரக அமைப்புகள், நிறைய மனிதர்களுக்கு அரசுப்பணி கிடைப்பதாக தெரிகிறது. இந்த மாதம், நிறைய கிரகங்கள் சேர்ந்து, குருவை பார்ப்பதால், ஒன்று நீதிபதிகள் அல்லது மடத்தின் குரு இவர்களின் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆக வாய்ப்புள்ளது.

சுக்கிரன்

சுக்கிரன் எப்போதும் கூட்டணிக் கட்சிகளைக் குறிப்பார். இந்த மார்கழி மாதத்தில், சுக்கிரன், தனுசு ராசியில் உள்ளார். அவர்கூட, அரசாங்க கிரகம் சூரியன். ஆளும் கட்சி கிரகம் செவ்வாய், எதிரி கட்சியைக் குறிக்கும் புதன் என இவர்கள் சேர்ந்து, குருவின் வீடான தனுசில், குருவின் பார்வையில் உள்ளனர். எனவே இந்த மாதம், கூட்டணி கட்சிகளின் டிமாண்ட் எகிறி அடிக்கும். ஆட்சியில் பங்கு அல்லது முழு தலைமையும் நாங்க... கூட இருப்பது நீங்க என்பார்கள். இதைக்கேட்டு ஆளும் கட்சி அலறும். எனினும் குரு பார்வையால் எல்லாம் சுபமாகவே முடியும். கூட்டணி கட்சிகள் ரொம்ப ஆட்டம் போடும். ஆளும் கட்சி, எதிர்கட்சி என எல்லாரும், இவர்களை தாங்குவதால், கெஞ்சுவதால் இவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகும். மேலும் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளவேண்டும் எனும் பழமொழியை இறுகப் பற்றிக்கொள்வர். ஏனெனில், அடுத்த மாதம், ஆளும் கட்சி, செவ்வாய் உச்சமடைந்து, மிகப்பலம் பெற்றுவிடுவார். அப்போது கூட்டணி கட்சிகளின் பாட்சா, ஆளுங்கட்சியிடம் பலிக்காது என்பதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளவும். 

சனி

சனிபகவான் காலபுருசனின் 11-ஆம் வீட்டில் உள்ளார். தற்போதைய கோட்சாரப்படி, குருவின் பார்வையைப் பெறுகிறார். குருவின் சாரத்தில் உள்ளார். சனி, தனது 10-ஆம் பார்வையால், புதனை பார்த்து, எதிர்கட்சிகளை ஒரு வேலையும் செய்ய முடியாமல், முடங்கச் செய்வார்.திருக்கணிதப்படி, சனி, மீன ராசியில் இருந்தால், அவர் தனது 10-ஆம் பார்வையால், சூரியன், செவ்வாய், சுக்கிரன் என அரசாங்கம், ஆளும் கட்சி, கூட்டணிக் கட்சி என அனைத்தையும், கூராக பார்த்து, அனைவரையும் சைலண்ட் மோடுக்கு கொண்டு போய்விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்கழி மாத நிகழ்வுகள், சனி பகவானின் கையில் உள்ளது.சனிபகவான், திருக்கணிதப்படி செயலாற்றி கொண்டிருந்தால், இயற்கை பேரிடர் ஏற்பட வழியுண்டு. எனினும் குரு பார்வை இருப்பதால், ரொம்ப மோசமாக இல்லாமல், ஓரளவு சேதாரத்துடன் இருக்கும். 

ராகு

இவர் காலபுருசனின் 11-ஆம் வீட்டில் சுய சாரத்தில் செல்கிறார். எனினும் குரு பார்வையைப் பெறுகிறார். மேலும் இந்த மார்கழி மாதம், ராகு, சதயம் 3-ஆம் பாதத்தில் செல்வதால், வாக்கோத்தமம் பெறுவார். குரு பார்வை பெறுவதால், வெளிநாட்டு தலைவர்கள், கூட்டாக சந்திப்பது, வெற்றிகரமாக நடக்கும். இதனால், வெளிநாடு சம்பந்தமான நிறைய இன்னல்கள், சுபமாக, நல்ல பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவுபெறும். வணிகம் நல்ல லாபம் தரும். நிறைய ஜாதகர்கள், பதவி உயர்வு பெறுவர். வெளிநாட்டு வழக்குகள் வெற்றி தரும். ராகு வெளிநாட்டை குறிப்பவர் 11-ஆமிடம்- வெளிநாடு சம்பந்தம் கொண்டது. குரு பார்வை விருத்தி தரும். எனவே வெளிநாட்டு விஷயங்கள் வெற்றி தரும் எனக் கூறப்பட்டுள்ளது.

கேது

கேது காலபுருசனின் 5-ஆம் வீடான சிம்மத்தில் பூரம், 1-ஆம் பாதத்தில் நின்று, இவரும் வர்க்கோத்தமம் பெறுகிறார். இதனால், நிறைய பெண்கள் மகப்பேறு பாக்கியம் கிடைக்கப்பெறுவர். குழந்தைப் பேறு சம்பந்தமாக, டெஸ்ட் கொடுத்தவர்கள், நல்ல ரிசல்ட் கிடைக்கப்பெறுவர். கூட்டணி கட்சியை சேர்ந்த, சில பெண் அரசியல்வாதிகள், தங்களின் தாய் கட்சியை விட்டு, பக்கத்து கட்சியில் சேர்ந்து, நல்ல வாக்குறுதிகள் பெறுவர். சில பெண்களுக்கு குடும்பமா, அரசியலா எதை தேர்ந்தெடுப்பது எனும் இக்கட்டான சூழல் ஏற்படும்போது, இந்தப் பெண்கள் கொஞ்சமும் அசராமல், குடும்பத்தை கடாசி தள்ளிவிட்டு, அரசியல் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவர். சுக்கிர சாரத்தில் செல்லும் கேது, இதையும் செய்வார். இதுக்கு மேலேயும் செய்வார்.

வானிலை

மார்கழி 2, 3, 4-ஆம் தேதிகளில் விருச்சிகத்தில் பயணம். 
நீர் ராசியில் சந்திரன் செல்வதால் மழை இருக்கும்.மார்கழி 5, 6, 7-ஆம் தேதிகளில் தனுசு ராசியில் செல்வார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் உள்ளனர். அங்கு சந்திரன் சென்று, திருக்கணிதப்படி சனி பார்வையும் பெற்றால், இயற்கை இடர்கள் உண்டாகும்.மார்கழி 9, 10, 11 அன்று கும்ப ராசியில் பயணம். அங்குள்ள ராகுவுடன் செல்லும்போது, காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மார்கழி 18, 19, 20-ல் மிதுனத்தில் சந்திரன், குருவுடன் செல்வார். அப்போது தனுசிலிருந்து சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் எனும் கிரகங்களின் நேர்பார்வையைப் பெறுவார். அப்போது கண்டிப்பாக, வானிலையில், ஏதோ மாற்றம் ஏற்படும். அது மழை அல்லது பெரும் காற்று அல்லது பூமி வெடிப்பாகவும் இருக்கலாம்.மார்கழி 23, 24, 25-ல் சிம்ம ராசியில் கேதுவுடன் செல்வார். தூறல் இருக்க வாய்ப்புண்டு.மார்கழி 29, 30-ல் விருச்சிக ராசியில் செல்லும்போது, அது நீர் ராசியாக இருப்பதால் மழைக்கு வாய்ப்புள்ளது.